Wednesday, October 7, 2009

தமிழருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு


செல்களின் டிஎன்ஏக்களில் உள்ள தகவல்களை வைத்து எப்படி உயிர்கள் உருவாகின்றன என்பதைக் கண்டுபிடித்த தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்த ஆண்டுக்கான வேதியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
இவருடன் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாமஸ் ஸ்டேய்ஸ், இஸ்ரேலைச் சேர்ந்த அடா யோனத் ஆகியோர் இந்த பரிசை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த மூவரும் செல்களில் உள்ள ரிபோசோம்கள் (ribosomes) குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இதில் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜில் உள்ள எம்ஆர்சி மாலிகுலார் பயாலஜி ஆய்வு மையத்தில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார்.
இவர்கள் எக்ஸ்ரே கிரிஸ்டலோகிராபி என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரிபோசோம்களி்ன் அணு கட்டமைப்பை முதன்முதலாக உலகுக்குத் தெரியப்படுத்தியவர்கள் ஆவர்.
உயிர்களில உள்ள ஜீன்களில் உள்ள டிஎன்ஏக்கள் சொல்லும் தகவல்களை வைத்து ரிபோசோம்கள் தேவையான உடலுக்குத் தேவையான ஆயிரக்கணக்கான புரோட்டீன்களைத் (புரத சத்துக்கள்) தயார் செய்கின்றன. டிஎன்ஏக்களின் கட்டளைகளை இந்த ரிபோசோம்கள் எப்படி பெறுகின்றன, அந்த கட்டளைகளை வைத்து புரதங்களை எவ்வாறு தயார் செய்கின்றன என்பதை இந்த மூன்று விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துள்ளனர்.
உயிர் வாழ இன்றியமையாத ஹார்மோன்கள், நோய் எதிர்ப்பு செல்கள், என்ஸைம்கள் எனப்படும் ஜீரண ரசாயனங்கள் ஆகியவை இந்த புரதங்களில் அடங்கும்.
ரிபோசோம்கள் எப்படி இவற்றைத் தயாரிக்கின்றன என்பதை இவர்கள் கண்டறிந்துள்ளதன் மூலம் நோய்களுக்கு எதிரான மருந்துகள் உற்பத்தியில் இந்த கண்டுபிடிப்புகள் பேருதவியாக இருக்கும்.
மேலும் நோய் உருவாக்கும் பாக்டீரியாக்களில் உள்ள ரிபோசோம்களை கட்டுப்படுத்தி அவற்றின் நோய் தாக்கும் திறனை ஒழிக்கவும் இந்த ஆராய்ச்சி முடிவுகள் உதவும்.
ஸ்வீடனின் ராயல் அகாடமி ஆப் சயின்ஸஸ் வழங்கும் இந்த நோபல் பரிசு வரும் டிசம்பர் மாதத்தில் இவர்களுக்கு அளிக்கப்படும்

No comments: