Monday, September 9, 2013

நடால் சாம்பியன் : யு.எஸ்., ஓபனில் அசத்தல்: ஜோகோவிச் ஏமாற்றம்

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். விறுவிறுப்பான பைனலில் செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தினார். நியூயார்க்கில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் "நம்பர்-1' வீரர் செர்பியாவின் ஜோகோவிச், தரவரிசையில் இரண்டாவது இடத்திலுள்ள ஸ்பெயினின் நடாலை எதிர் கொண்டார். முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய நடால், இரண்டாவது செட்டை 3-6 என இழந்தார். மீண்டும் எழுச்சி கண்ட நடால் அடுத்த இரண்டு செட்களை 6-4, 6-1 என தன்வசப்படுத்தினார். சுமார் மூன்றரை மணி நேரம் நீடித்த ஆட்டத்தின் முடிவில், நடால் 6-2, 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, கோப்பையை தட்டிச் சென்றார். இரண்டாவது முறை: இதன் மூலம், நடால் யு.எஸ்., ஓபன் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இதற்கு முன் 2010ம் ஆண்டு இத்தொடரை கைப்பற்றியிருந்தார். தவிர, ஒட்டுமொத்தமாக நடால் பெறும் 13வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். கடந்த ஆண்டு இத்தொடரில் முழங்கால் காயம் காரணமாக விலகிய இவர், பிப்ரவரி மாதம் மீண்டும் போட்டிக்கு திரும்பினார். இந்நிலையில், ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, யு.எஸ்., ஓபன் பட்டத்தை வென்றது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. செரினா அசத்தல்: இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் "நம்பர்-1' வீராங்கனை அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், இரண்டாவது இடத்திலுள்ள பெலாரசின் அசரன்காவை எதிர்கொண்டார். முதல் செட்டை 58 நிமிட போராட்டத்துக்குப் பின் 7-5 என, செரினா கைப்பற்றினார். அடுத்த செட்டில் 4-1 என முன்னிலை பெற்றார். இருப்பினும் கடும் போராட்டத்தை வெளிப்படுத்திய அசரன்கா 6-6 என சமன் செய்தார். பின் "டை பிரேக்கர்' மூலம் இதை 7-6 என வென்று பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது செட்டில் சொதப்பினார் அசரன்கா. இதை பயன்படுத்திக் கொண்ட செரினா 6-1 என வென்றார். 2 மணி நேரம், 45 நிமிடங்கள் நடந்த போராட்டத்தின் முடிவில், செரினா வில்லியம்ஸ் 7-5, 6-7, 6-1 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று, கோப்பை வென்றார். இத்துடன் பரிசுப்பணமாக போனஸ் (ரூ. 6.5 கோடி) உட்பட மொத்தம் ரூ. 23.24 கோடி தட்டிச் சென்றார். இதற்கு முன் 1999, 2002, 2008, 2012ல் இத்தொடரில் சாதித்த செரினா, ஐந்தாவது முறையாக யு.எஸ்., ஓபன் பட்டம் கைப்பற்றி அசத்தினார். தவிர, ஆஸ்திரேலிய ஓபனில் 5 (2003, 2005, 2007, 2009, 2010), பிரெஞ்ச் ஓபனில் 2 (2002, 2013), விம்பிள்டனில் 5 (2002, 2003, 2009, 2010, 2012) என மொத்தம், 17 கிராண்ட்ஸ்லாம் கோப்பை வென்றுள்ளார். முதல் வீராங்கனை யு.எஸ்.ஓபன் வரலாற்றில் அதிக வயதில் (31) பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமை பெற்றார் செரினா வில்லியம்ஸ். இதற்கு முன் 293 நாட்கள் பின்தங்கிய ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட் 1973ல் வென்று இருந்தார். * தவிர, கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் வரலாற்றில் அதிக வயதில் பட்டம் வெல்லும் மூன்றாவது வீராங்கனை செரினா தான். * தரவரிசையில் "நம்பர்-1' இடத்தில் இருந்து, கடந்த 2007ல் ஜஸ்டின் ஹெனின், தற்போதுசெரினா கோப்பை வென்றுள்ளனர். * அதேபோல, 2009-2010க்குப் (கிளைஸ்டர்ஸ்) பின், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கோப்பை வென்றது செரினா மட்டும் தான். மூன்றாவது இடம் கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் ஜெர்மனியின் ஸ்டெபி கிராப், அதிகபட்சமாக 22 முறை கோப்பை வென்றார். அடுத்த இடத்தில் அமெரிக்காவின் கிறிஸ் எவர்ட், ö குடியரசின் மார்டினா நவரத்திலோவா ஆகியோர் 18 பட்டம் வென்றுள்ளனர். மூன்றாவது (17) இடத்தில் செரினா வில்லியம் உள்ளார்.

No comments: