Wednesday, September 11, 2013

ரஃபேல் நடால் சாம்பியன்

ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோலவே, "ஹார்ட் கோர்ட்' மைதானத்தில் ஜொலித்து வரும் நடால், 2013-ம் ஆண்டுக்கான அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார். நியூயார்க்கில் திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை 6-2, 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி நடால் வெற்றி பெற்றார். நடாலுக்கு இது இரண்டாவது அமெரிக்க ஓபன் பட்டமாகும். இதற்கு முன், அவர் 2010-ம் ஆண்டு ஜோகோவிச்சை வீழ்த்தி இப்பட்டத்தை கைப்பற்றியிருந்தார். இப்பட்டத்தை வென்று, தனது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கையை 13ஆக உயர்த்தினார் நடால். இன்னும், 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றால், முதலிடத்தில் உள்ள ரோஜர் ஃபெடரரின் சாதனையை சமன் செய்ய முடியும். 27 வயது நிரம்பிய நடால், அந்த சாதனையை விரைவில் புரிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த சகுனம்: திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்று, தரவரிசையில் முதல் இரு இடங்களில் உள்ள வீரர்களுக்கு இடையேயான ஆட்டம் என்பதால், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மைதானத்தில் குவித்திருந்தனர். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் நடால், 42 நிமிடங்களுக்குள் கைப்பற்றினார். இதுவரை, தான் விளையாடிய கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் 154 ஆட்டங்களில் 151 ஆட்டங்களில் முதல் செட்டை நடால் கைப்பற்றியுள்ளார். இதனால், அமெரிக்க ஓபனில் முதல் செட்டைக் கைப்பற்றியது சிறந்த சகுனமாகக் கருதப்பட்டது. ஆனால், அடுத்த செட்டில் ஜோகோவிச் கடும் சவால் அளித்தார். இறுதியில் அவரின் நெருக்கடிக்கு நடால் பணிந்தார். இதனால் 2-வது செட்டை 6-3 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றினார். முதலில் பின்னடைவைச் சந்தித்து, பின்னர் சரிவிலிருந்து மீண்டு வெற்றி பெறுபவர் என்ற பெயரைப் பெற்றுள்ள நடால், 3-வது செட்டில் சுதாரித்துக் கொண்டார். இந்த செட்டில் ஜோகோவிச், தேவையற்ற தவறுகளை புரிந்தார். அதனால், இந்த செட்டை அவர் 4-6 என்ற கணக்கில் நடாலிடம் இழந்தார். ஜோகோவிச்சின் தேவையற்ற தவறு 4-வது செட்டிலும் தொடர்ந்ததால், அந்த செட்டை நடால் 6-1 என்று கைப்பற்றி அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார். பரிசுத் தொகை: அமெரிக்க ஓபனை வென்றதன் மூலம், நடாலுக்கு 23 கோடி ரூபாய் ரொக்கம் (போனஸ் தொகையுடன்) பரிசளிக்கப்பட்டது. வெற்றி குறித்து நடால் கூறுகையில், "இந்த வெற்றி என்னை உணர்ச்சி வசப்படுத்தியது. எனது அணியினருக்கு இது குறித்து நன்கு தெரியும். ஜோகோவிச், சிறந்த வீரர். என்னுடைய சிறந்த ஆட்டத்தை அவர் எப்போதும் வெளிக்கொண்டு வருபவர்' என்று தெரிவித்தார். ஏமாற்றம்: அமெரிக்க ஓபன் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தொடர்ச்சியாக 4 முறை முன்னேறிய ஜோகோவிச், 2011-ம் ஆண்டு மட்டும் நடாலை வீழ்த்தி வெற்றி பெற்றார். மற்ற மூன்று முறையும் அவர் தோல்வியையே தழுவியுள்ளார். ஆஸ்திரேலிய ஓபனை வென்று இந்த சீசனை சிறப்பாக தொடங்கினார் ஜோகோவிச். ஆனால், பிரெஞ்சு ஓபனில் அரையிறுதியிலும், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிகளில் இறுதிச்சுற்றிலும் தோற்றிருப்பது ஜோகோவிச்சுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தோல்விக்குப் பின் ஜோகோவிச் கூறுகையில், "வெற்றி பெற வேண்டும் என்று எப்போதும் விரும்புவேன். ஆனால், விளையாட்டில் தோல்வியும் ஓர் அங்கமே. இந்த ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் நடால் சிறப்பாக விளையாடினார். இந்த வெற்றிக்கு நடால் தகுதியானவர். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். என்னுடைய வயது 26. இன்னும் சிறப்பான ஆட்டத்தை நான் வெளிப்படுத்தவில்லை. வரும் காலங்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்' என்று தெரிவித்தார். 2013-இல் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்கள் பட்டம் - வீரர் - வீராங்கனை ஆஸ்திரேலிய ஓபன் நோவக் ஜோகோவிச் விக்டோரியா அசரென்கா பிரெஞ்சு ஓபன் ரஃபேல் நடால் செரீனா வில்லியம்ஸ் விம்பிள்டன் ஆன்டி முர்ரே மரியோன் பர்டோலி அமெரிக்க ஓபன் ரஃபேல் நடால் செரீனா வில்லியம்ஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றியதுடன் நடால் வென்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்தது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்றுக்கு 18 முறை முன்னேறியுள்ள நடால், 13இல் வாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய ஓபன்: 2009 பிரெஞ்சு ஓபன்: 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013 விம்பிள்டன்: 2008, 2010 அமெரிக்க ஓபன்: 2010, 2013 மொத்த ஒற்றையர் பட்டங்கள்: 60 இந்த ஆண்டில் நடால் வென்ற பட்டங்கள் 2013-ம் ஆண்டு நடாலுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. 2012-ம் ஆண்டில் பிரெஞ்சு ஓபனை வென்ற பின், காயத்தால் அவதிப்பட்டு வந்த நடால், 7 மாதங்களாக டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கவில்லை. காயத்துக்குப் பிறகு, 2013-ம் ஆண்டு பிப்ரவரியில் களத்துக்குத் திரும்பிய நடால், இந்த சீசனில் இதுவரை 10 பட்டங்களை வென்றுள்ளார். மாதம் - வென்ற பட்டம் பிப்ரவரி-17 பிரேசில் ஓபன் மார்ச்-2 மெக்ஸிகனோ டெலிசெல் மார்ச்-17 பிஎன்பி பரிபாஸ் ஓபன் ஏப்ரல்-28 பார்சிலோனா ஓபன் மே-12 மேட்ரிட் ஓபன் மே-19 பிஎன்எல் டென்னிஸ் ஜூன்-9 பிரெஞ்சு ஓபன் ஆகஸ்ட்-11 ரோஜர்ஸ் கோப்பை ஆகஸ்ட்-18 சின்சினாட்டி ஓபன் செப்டம்பர்-9 அமெரிக்க ஓபன் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர்கள் ரோஜர் ஃபெடரர் (ஸ்விட்சர்லாந்து) - 17 பீட் சாம்ப்ராஸ் (அமெரிக்கா) - 14 ரஃபேல் நடால் (ஸ்பெயின்) - 13 ராய் எமர்சன் (ஆஸ்திரேலியா) - 12 ஜான் போர்க் (ஸ்விட்சர்லாந்து) - 11 ராட் லேவர் (ஆஸ்திரேலியா) - 11 பில் டில்டென் (அமெரிக்கா) - 10 கடைசி 10 ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியன்கள் 2013: ரஃபேல் நடால் (ஸ்பெயின்) 2012: ஆன்டி முர்ரே (பிரிட்டன்) 2011: நோவக் ஜோகோவிச் (செர்பியா) 2010: ரஃபேல் நடால் (ஸ்பெயின்) 2009: ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ (ஆர்ஜெண்டினா) 2008: ரோஜர் ஃபெடரர் (ஸ்விட்சர்லாந்து) 2007: ரோஜர் ஃபெடரர் (ஸ்விட்சர்லாந்து) 2006: ரோஜர் ஃபெடரர் (ஸ்விட்சர்லாந்து) 2005: ரோஜர் ஃபெடரர் (ஸ்விட்சர்லாந்து) 2004: ரோஜர் ஃபெடரர் (ஸ்விட்சர்லாந்து) ஓர் ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல முடியாது: நடால் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் எனப்படும் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெறும். இந்த நான்கு பட்டங்களையும் ஒரே ஆண்டில் வெல்ல வேண்டும் என்று ஒவ்வொரு வீரரும் லட்சியம் கொண்டிருப்பர். இந்த சாதனையை அமெரிக்காவின் டான் பட்ஜ் (1938), ஆஸ்திரேலியாவின் ராட் லேவர் (1962, 1969) ஆகியோர் நிகழ்த்தியுள்ளனர். அதன்பிறகு, மற்ற வீரர்களால் இந்த சாதனையை நிகழ்த்த முடியவில்லை. இது குறித்து நடால் கூறுகையில், "ஓர் ஆண்டில் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் தற்போது வெல்வது என்பது முடியாத காரியம் என்றே தோன்றுகிறது. இது என்னுடைய கருத்து. தற்போது சிறந்த வீரர்கள் களத்தில் உள்ளனர். கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல வேண்டுமென்றால், ஃபெடரர், ஃபெரர், முர்ரே மற்றும் ஜோகோவிச் உள்ளிட்ட வீரர்களை வெல்ல வேண்டும். இந்த வீரர்கள் லீக் சுற்றுகளில் தோல்வியைச் சந்திக்க மாட்டார்கள். இவர்களுக்கு எதிராக வெற்றி பெற்று 4 பட்டங்களையும் வெல்வது கடினம்' என்று தெரிவித்தார். கடைசியாக நடைபெற்ற 35 கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிகளில், 34 முறை ஜோகோவிச், நடால், ஃபெடரர் மற்றும் முர்ரே ஆகிய நான்கு பேரில் ஒருவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: