Wednesday, September 11, 2013

2014 உலகக் கோப்பை கால்பந்து: அமெரிக்கா, ஆர்ஜெண்டினா தகுதி

2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதாவது உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு ஆர்ஜெண்டினா, அமெரிக்கா, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன. பிரேசிலில் 2014-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி முத் ஜூலை 13-ம் தேதி வரை உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக பிரேசில் நகரின் உள்கட்டமைப்பு வசதிகள் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. பிரேசிலில் 2-வது முறையாக உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பையில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும். தகுதிச்சுற்றுகளின் அடிப்படையில் அந்த 32 அணிகள் தேர்வு செய்யப்படும். போட்டியை நடத்தும் நாடு என்ற அந்தஸ்தில், பலம் வாய்ந்த பிரேசில் அணி ஏற்கெனவே தகுதி பெற்று விட்டது. மற்ற அணிகள் தகுதிச் சுற்றுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. கண்டங்களில் இடம் பெற்றுள்ள நாடுகளுக்கு இடையே நடைபெறும் கால்பந்து தொடரில் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் உலகக் கோப்பைக்கு அணிகள் தகுதிபெறும். தகுதிச்சுற்றுகள்: உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகள் பல்வேறு நாடுகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளுக்கு இடையேயான ஆட்டத்தில் பராகுவேயின் தலைநகர் அசன்சியனில் பராகுவேயும், ஆர்ஜெண்டினாவும் மோதின. இந்த ஆட்டத்தில் ஆர்ஜெண்டினா அணி 5-2 என்ற கோல் கணக்கில் வென்று உலகக் கோப்பைக்கு போட்டிக்குத் தகுதி பெற்றது. ஆர்ஜெண்டினாவுக்கு கிடைத்த இரு பெனால்டி வாய்ப்புகளை மெஸ்ஸி கோலாக மாற்றினார். அதேசமயம், தென் அமெரிக்க பிரிவில் கொலம்பியா, உருகுவே அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் கொலம்பியா அணி 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறுவதற்கு அந்த அணிக்கு மேலும் ஒரு புள்ளிகள் வேண்டும். 1998-ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி பெற கொலம்பியா அணி போராடி வருகிறது. அமெரிக்கா, கோஸ்டா ரிகா: மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள நாடுகளுக்கு இடையேயான தகுதிச்சுற்றுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அமெரிக்க 2-0 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவை வீழ்த்தி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. ஜமைக்கா அணியுடனான ஆட்டத்தில் 1-1 என்று டிரா செய்ததன் மூலம் கோஸ்டா ரிகா அணியும் உலகக் கோப்பைக்கு முன்னேறியது. முதல் ஐரோப்பிய நாடுகள்: உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற முதல் ஐரோப்பிய நாடுகள் என்ற பெருமையை இத்தாலியும், நெதர்லாந்தும் பெற்றுள்ளன. நெதர்லாந்து அணி, கடந்த உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இத்தாலியின் துரின் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செக் குடியரசுக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி அணி வெற்றி பெற்றது. 1958-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியைத் தவிர, மற்ற உலகக் கோப்பை போட்டிக்கு இத்தாலி அணி தகுதி பெற்றுள்ளது அந்த அணிக்கு உள்ள சிறப்பாகும். அதேசமயம், கோப்பையை வெல்லும் அணியாகக் கருதப்படும் ஜெர்மனி மற்றும் ஸ்விட்சர்லாந்து அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் விளிம்பில் உள்ளது.
மாறாக ரஷியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதி பெறுவது, வரும் காலங்களில் தகுதிச்சுற்றில் அந்த அணிகள் விளையாடும் ஆட்டங்களைப் பொறுத்தே உள்ளது. 2014 உலகக் கோப்பைக்கு இதுவரை தகுதி பெற்றுள்ள அணிகள் அணி தகுதிபெற்ற நாள் உலகக் கோப்பையில் சிறந்த பட்சம் பிரேசில் அக்டோபர்-2007 20-வது முறை வெற்றி (1958, 1962, 1970, 1994, 2002) ஜப்பான் ஜூன்-2013 5-வது முறை காலிறுதிக்கு முந்தைய சுற்று (2002, 2010) ஆஸ்திரேலியா ஜுன்-2013 4-வது முறை காலிறுதிக்கு முந்தைய சுற்று (2006) ஈரான் ஜுன்-2013 4-வது முறை அணிப் பிரிவுகளில் (1978, 1998, 2006) தென் கொரியா ஜூன்-2013 9-வது முறை 4-ம் இடம் (2002) நெதர்லாந்து செப்டம்பர்-2013 10-வது முறை 2-ம் இடம் (1974, 1978, 2010) இத்தாலி செப்டம்பர்-2013 18-வது முறை வெற்றி (1934, 1938, 1982, 2006) அமெரிக்கா செப்டம்பர்-2013 10-வது முறை 3-ம் இடம் (1930) கோஸ்டா ரிகா செப்டம்பர்-2013 4-வது முறை காலிறுதிக்கு முந்தைய சுற்று (1990) ஆர்ஜெண்டினா செப்டம்பர்-2013 16-வது முறை வெற்றி (1978, 1986)

No comments: