Sunday, January 18, 2009

தவளைக்கும் சிறுமிக்கும் வினோத திருமணம்


கிராம நன்மைக்காக கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிப் புதுப்பட்டு கிராமத்தில் சிறுமிக்கும் தவளைக்கும் வினோத திருமணம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகில் உள்ளது பள்ளிப்புதுப்பட்டு கிராமம். பழங்காலத்தில் இக்கிராமத்தில் காலரா நோய் பரவியபோது சிவன் தவளை உருவும் அம்மன் சிறுமி உருவெடுத்து அவர்களுக்கு திருமணம் நடத்தினால் காலரா நோய் குணமடையும் என பெரியவர்கள் கூறியதைத் தொடர்ந்து தவளைக்கும் சிறுமிக்கும் திருமணம் நடந்தது தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் தவளைக்கும் சிறுமிக்கும் வினோத திருமணம் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடந்தது. பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் வசிக்கும் சகோதர உறவினர்கள் கொண்ட குடும்பத்தினர் பெண் வீட்டாராகவும் மாமன் முறை குடும்பத்தினர் மாப் பிள்ளை வீட்டாராகவும் கருதப்பட்டனர். மாப்பிள்ளை (தவளை) வீட்டார் சீர்வரிசையுடன் மாலை 4 மணிக்கு பெண் பார்க்க ஊர்வலமாக சென்று பெண்ணைப் பார்த்தனர். பெண்ணுக்கு நகை சீர்வரிசை வரதட்சணை குறித்து பேசினர். தவளை - சிறுமி திருமணத்திற்கு பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமு மகள் விக்னேஸ்வரி(8) திருமணப் பெண்ணாக பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டார். பிறகு கோவில் குளத்தில் இருந்து ஒரு தவளை பிடிக்கப்பட்டு அதை மாப்பிள்ளையாகக் கருதி மண மேடையில் அமர வைத்தனர். பெண் வீட்டார்சிறுமியைத் திருமணக் கோலத்தில் அலங்கரித்து வீதியுலா நடத்தி மண மேடைக்கு அழைத்து வந்தனர். பள்ளிப்புதுப்பட்டு கிராம ஆரம்ப பள்ளி அருகில் அமைக்கப்பட்டு இருந்த மணமேடையில் மணமகன் தவளை மணமகள் சிறுமி அமர வைத்தனர். மந்திரங்கள் ஓத பொதுமக்கள் சூழ இரவு 7.30 மணிக்கு தவளை - சிறுமி திருமணம் நடந்தது. தவளை சார்பில் கோவில் பூசாரி சிறுமிக்குத் தாலி கட்டினார். தாலி கட்டிய பிறகு பெண்ணுக்குச் சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தவளைக்கும் பெண்ணுக்கும் இருவீட்டார் சார்பில் மொய் பணம் மற்றும் நகைகள் வரிசை வைக்கப்பட்டன. திருமணத்தில் வரிசை வைத்து பலர் தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர். தொடர்ந்து திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. திருமணம் முடிந்தபின் தவளைக்குப் பூஜை செய்து பிடித்த குளத்தில் விட்டுவிட்டனர்.

No comments: