Thursday, July 2, 2009

மகா கும்பாபிஷேகம்



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. 14 ஆண்டுகளுக்குப்பிறகு நடந்த இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஏராளமான சிறப்புகள் உண்டு. முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் அனைத்தும் குன்றுகளின் மீதும் மலை மீதும் அமைந்து இருக்க, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மட்டும் கடற்கரையில் அலைகளின் ஆர்ப்பரிப்பில் 137 அடி உயர ராஜகோபுரத்துடன் நிமிர்ந்து நிற்பது மற்ற சிறப்புகளுக்கு எல்லாம் சிகரமானதாகும்.மற்ற முருகனை எல்லாம் பக்தர்கள் தரிசிக்க மலைமேல் ஏறி செல்ல வேண்டும். ஆனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க பக்தர்கள் இறங்கி வரவேண்டும். மனதாலும், உடலாலும் இறங்கி வரும் பக்தர்களை காக்கின்ற கண்கண்ட தெய்வம் பாலசுப்பிரமணியர்.
அளவிட முடியாத இத்தனை சிறப்புகளை கொண்ட திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கடந்த 9-7-1995 அன்று நடந்தது.14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ரூ.21/2 கோடி செலவில் கோவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது.
திருப்பணிகளால் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, வெங்கடாசலபதி, நடராஜர் உள்பட அனைத்து சன்னதிகளும், விமானங்களும், ராஜகோபுரமும் திருப்பணிகள் செய்யப்பட்டன. இந்த திருப்பணிகள் மூலம் கோவில் புதுப்பொலிவு பெற்று திகழ்கிறது.
கும்பாபிஷேக விழா கடந்த 26-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதை 200-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் நடத்தினார்கள். வெங்கடாசலபதிக்குரிய யாகசாலை பூஜையை பட்டாச்சாரியார்கள் நடத்தினார்கள்.

No comments: