Sunday, June 28, 2009

கட்டபொம்மன் காலத்து வெண்கல மணி ஒலிக்குமா?


திருச்செந்தூர் கோயில் ராஜகோபுரத்திலுள்ள கட்டபொம்மன் காலத்து மணியை ஜூலை 2-ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தின் போது ஒலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கட்டபொம்மனின் நேரடி வாரிசு வீமராஜா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வீமராஜா கூறியதாவது:
வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை திக்குவிஜய கட்டபொம்மு துரை ஆட்சியின்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு 100 கிலோ எடையுள்ள வெண்கல மணி வழங்கப்பட்டது. இந்த மணி கோயில் ராஜகோபுரத்தின் 7வது நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நடைபெறும் உச்சிக்கால பூஜையின்போது இந்த மணி ஒலிக்கப்படும். அதைத் தொடர்ந்து திருச்செந்தூர் கோயிலில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வரையுள்ள 40 மணி மண்டபங்களில் அமைக்கப்பட்டிருந்த மணிகள் ஒலிக்கும்.
அதன்பிறகே கட்டபொம்மன் பூஜை முடித்து காலை உணவை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும் கோயில் பிரசாதம் குதிரை வீரர் மூலம் கோட்டைக்கு அனுப்பி வைக்கப்படும்.
திருச்செந்தூர் கோயில் ராஜகோபுரத்திலுள்ள மணி கடந்த 1995ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின்போது ஒலிக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் அதன் இரும்பு சங்கிலிகள் துருப்பிடித்து இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
தற்போது ஜூலை 2ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்திற்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ள நிலையில் கட்டபொம்மன் காலத்து மணியின் சங்கிலியையும் சரி செய்து கும்பாபிஷேகத்தின் போது ஒலி எழுப்பச் செய்யவேண்டும். தொடர்ந்து கோயிலில் தினமும் உச்சிக்கால பூஜையின் போது மணி ஒலிக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ளவேண்டும். இதன்மூலம் கட்டபொம்மன் காலத்து நினைவுகள் மலரும்.

No comments: