Wednesday, March 4, 2009

11ம் நூற்றாண்டின் தலைப்பலி சிற்பம்


பண்ருட்டி அருகே, கி.பி., 11ம் நூற்றாண்டைச்
சேர்ந்த தலைப்பலி சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடலூர்
மாவட்டம், பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு கிராமத்தில் நங்கை
அம்மன் கோவில், கொற்றவை கோவிலின் முன்புறமுள்ள வேப்ப மரத்தில் பல
தலைமுறையாக, உடைந்த நிலையில் சிற்பம் காணப்பட்டது.

இச்சிற்பத்தை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, கல்வெட்டு
ஆய்வாளர் தமிழரசன், கல்லூரி விரிவுரையாளர் வேல்முருகன் ஆய்வு
செய்தனர்.கி.பி., 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த, "நவகண்டம்' என்ற
வகையைச் சேர்ந்த தலைப்பலி சிற்பம் இது என தெரிந்தது. ஒரே கல்லில்
செதுக்கப்பட்ட இச்சிற்பம், உடைந்த நிலையில் உள்ளது. இடது கையால்
கழுத்தைத் தாங்கி, வலது கையில் ஒரு குறுவாளை கொண்டு தன் தலையைத்
தானே அறுத்து கொள்ளும் நிலையில் உள்ளது. தலைப்பலி கொடுக்கும்
வீரன் பத்மாசனம் இட்டு அமர்ந்து கண்களை மூடிய நிலையில்
உள்ளான்.இச்சிற்பத்தை சுற்றி பொறிக்கப்பட்டிருக்கும் சோழர் காலத்
தமிழ் எழுத்துக்கள், அதன் வரலாற்றை அரிய உதவியது. கி.பி., 11ம்
நூற்றாண்டின் எழுத்துக்களுடன் காணப்படும் கல்வெட்டு மொத்தம்
எட்டு வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டு, "அதிராஜ மாங்கல்ய புரத்து அழிதகா நாட்டைச்
சேர்ந்த முண்டன் மகன் என்பவன் தன் தலையை தானே பலி கொடுத்தான்'
என்றும், "தன் தலைவனான அரசன் வேந்தவேல், போரில் வெற்றி அடைய
வேண்டி, இங்குள்ள கொற்றவை தெய்வத்திற்கு மனப்பூர்வமாக தன் தலையை
தானே பலி கொடுத்து "நவகண்டம்' செய்து கொண்டான்' என்றும்
கூறுகிறது.தலைப்பலி கொடுத்தவன் பெயர் உள்ள பகுதி அழிந்து போய்
இருப்பதால் இந்த வீரனின் பெயர் அறிய முடியவில்லை; எனினும்
முண்டன் மகன் என்று தெரிகிறது. எந்த அரசனுக்காக தன் தலையை பலி
கொடுத்தான் என தெரியவில்லை."கொற்றவைக்குப் பலி கொடுத்த
வீரனுக்கு, இந்த ஊரைச் சேர்ந்த பேறகடிச்சான் பிள்ளை சேட்டையை
சேவித்தான்' என கல்வெட்டு கூறுகிறது

2 comments:

முனைவர் மு.இளங்கோவன் said...

வாழ்த்துகள்.
பயனுடைய செய்தி.
பதிவுக்கு நன்றி
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

Anonymous said...

எங்கள் ஊர் எங்கள் பெருமை