Wednesday, October 16, 2013

உலகக் கோப்பை கால்பந்து: போஸ்னியா, ஸ்பெயின் தகுதி

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு போஸ்னியா-ஹெர்சிகொவினா, நடப்புச் சாம்பியன் ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன. 2104-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பைக்கான கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற உள்ளது. இதில், 32 அணிகள் போட்டியிட உள்ளன. போட்டியை நடத்தும் நாடு என்ற அந்தஸ்தில் பிரேசில் நேரடியாகத் தகுதி பெற்றது. மற்ற அணிகள், தகுதிச்சுற்றுகளின் அடிப்படையில் தகுதி பெற்று வருகின்றன. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா, வட மற்றும் மத்திய அமெரிக்கா, ஓசியானா கண்டங்களில் நடைபெறும் போட்டிகளின் அடிப்படையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று வருகின்றன. தகுதிச்சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. போஸ்னியா தகுதி: ஐரோப்பிய கண்டத்தில் இடம் பெற்றுள்ள அணிகள் யுஇஎஃப்ஏ குரூப் பிரிவிலான ஆட்டத்தின் அடிப்படையில் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று வருகின்றன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் போஸ்னியாவும், லிதுவேனியாவும் மோதின. இந்த ஆட்டத்தில் போஸ்னியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, யுஇஎஃப்ஏ குரூப் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தது. இந்த ஆட்டத்தில், போஸ்னியாவின் இபிசெவிச் 68-வது நிமிடத்தில் கோல் அடித்து, அணியை உலகக் கோப்பைக்குத் தகுதி பெற வைத்தார். இந்த வெற்றியினால், உலகக் கோப்பை போட்டிக்கு முதன்முறையாக, போஸ்னியா அணி தகுதி பெற்றது. 5-வது முறையாக: மற்றொரு தகுதிச்சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், போலந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில், இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம், உலகக் கோப்பைக்கு தொடர்ந்து 5-வது முறையாக இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்புச் சாம்பியன் ஸ்பெயின்: நடப்புச் சாம்பியனான ஸ்பெயின் அணியும் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று விட்டது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் 2-0 என்ற கோல் கணக்கில் ஜார்ஜியா அணியைத் தொற்கடித்தது. இதுதவிர, மற்ற தகுதிச்சுற்று ஆட்டங்களின் அடிப்படையில் ரஷியா, சிலி, ஈகுவேடார், ஹோண்டுராஸ் ஆகிய அணிகளும் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றன. இதுவரை, 22 அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. தகுதிச்சுற்றுகளின் அடிப்படையில் மேலும் 11 அணிகள் உலகக் கோப்பைக்கு தேர்வாக உள்ளன.

No comments: