Wednesday, October 16, 2013

உலககோப்பை கால்பந்து: ஸ்பெயின் தகுதி

: பிரேசிலில் நடக்கவுள்ள உலககோப்பை கால்பந்து தொடருக்கு "நடப்பு சாம்பியன்' ஸ்பெயின், போஸ்னியா உள்ளிட்ட அணிகள் முன்னேறின. பிரேசிலில் அடுத்த ஆண்டு (ஜூன் 12- ஜூலை 13) உலககோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும். பிரேசில், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 14 நாடுகள் இத்தொடரில் பங்கேற்க ஏற்கனவே தகுதி பெற்றன. எஞ்சியுள்ள இடங்களுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் (யு.இ.எப்.ஏ.,) நேற்று நடந்த "ஐ' பிரிவு போட்டியில் ஸ்பெயின் அணி, ஜார்ஜியாவை எதிர்கொண்டது. இதில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு முதல் பாதியில் நெக்ரிடோ (26வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். இதற்கு ஜார்ஜியா அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. பின் இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு, மாடா (61) ஒரு கோல் அடித்தார். இதற்கு கடைசிவரை போராடிய ஜார்ஜியா அணி வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. முடிவில், ஸ்பெயின் அணி, ஜார்ஜியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 14வது முறையாக தகுதிபெற்றது. வரலாறு படைத்தது போஸ்னியா: "ஜீ' பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் போஸ்னியா அணி, லிதுவானியா அணியை எதிர்கொண்டது. போட்டியின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. பின் இரண்டாவது பாதியில் எழுச்சிகண்ட போஸ்னியா அணிக்கு விடாட் (68) ஒரு கோல் அடித்தார். இதற்கு லிதுவானியா அணி வீரர்களால் பதிலடி கொடுக்கமுடியவில்லை. முடிவில், 1-0 என வெற்றி பெற்ற போஸ்னியா அணி, உலககோப்பை தொடருக்கு முதல் முறையாக தகுதி பெற்று வரலாறு படைத்தது. * "எப்' பிரிவில் ரஷ்யா, அஜர்பெய்ஜான் அணிகள் மோதிய மற்றொரு போட்டி 1-1 என "டிரா' ஆனது. இருப்பினும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த ரஷ்யா (22 புள்ளி) உலககோப்பை தொடருக்கு முன்னேறியது. * "எச்' பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணி, போலந்தை 2-0 என வீழத்தி, உலககோப்பை தொடருக்குள் நுழைந்தது. அர்ஜென்டினா தோல்வி * தென் அமெரிக்க நாடுகளுக்கான தகுதிச்சுற்று போட்டியின் முதலிடம் பிடித்த அர்ஜென்டினா அணி, ஏற்கனவே உலககோப்பை தொடருக்கு முன்னேறிவிட்டது. நேற்று நடந்த லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி, இரண்டு முறை உலக சாம்பியனான (1930, 1950) உருகுவே அணியை சந்தித்தது. இதில் அசத்திய உருகுவே அணி, 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. இருப்பினும் ஜார்டன் அணிக்கு எதிரான "பிளே ஆப்' சுற்றில் வென்றால் மட்டுமே உருகுவே அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும். * மற்றொரு போட்டியில் சிலி அணி, ஈகுவேடார் அணியை 2-1 என வென்று உலககோப்பை தொடருக்கான வாய்ப்பை உறுதி செய்தது. ஈகுவேடார், உருகுவே அணிகள் தலா 25 புள்ளிகள் பெற்றுள்ளது. இருப்பினும் ஈகுவேடார் அணி, உருகுவே அணியை (4 கோல்) கோல்கள் வித்தியாச அடிப்படையில் பின்னுக்கு தள்ளி, உலககோப்பை தொடருக்கு 2006க்கு பின் முன்னேறியது.

No comments: