Wednesday, October 9, 2013
தோனி, சச்சினை முந்தும் கோஹ்லி
விளம்பர வருமானத்தில் தோனி, சச்சினை முந்தினார் இளம் வீரர் விராத் கோஹ்லி. இவர், விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் ஜெர்மனி நிறுவனத்துடன் ஆண்டுக்கு ரூ. 10 கோடிக்கு ஒப்பந்தம் செய்ததாக தெரிகிறது.
இந்திய அணியின் இளம் வீரர் விராத் கோஹ்லி, 25. கடந்த 2008ல் இந்திய அணிக்கு 19 வயது உலக கோப்பை வென்று தந்தார். இவரது சிறப்பான பேட்டிங் தொடர, மிக விரைவில் துணைக் கேப்டன் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக அசத்திய கோஹ்லி, ஒருநாள் தொடரை முழுமையாக வென்று, இந்திய அணி கோப்பை கைப்பற்ற உதவினார்.
இயற்கை வரம்:
அழகான உடல் அமைப்பு, கவர்ச்சிகரமான பார்வை, சிறப்பான அணுகுமுறையால் மைதானத்துக்கு வெளியிலும், வெற்றிகரமாக ஜொலிக்கிறார். கிரிக்கெட்டில் கிடைக்கும் ஓய்வுகளை வீணடிக்காத இவர், மொபைல் போன், டொயோட்டா, பெப்சி உள்ளிட்ட 13 பொருட்களுக்கு மாடலாக தோன்றுகிறார்.
மதிப்பு அதிகம்:
2008ல் சச்சினுக்கு மாற்றாக பேசப்பட்ட இவரது விளம்பர மதிப்பு ரூ. 3 கோடியாக இருந்தது. இப்போது பல மடங்கு அதிகரிக்க, கோஹ்லியின் வருமானம் கொடி கட்டி பறக்கிறது. கடந்த ஆண்டு விளம்பரங்கள் மூலம் ரூ. 40 கோடி வரை கோஹ்லிக்கு வருமானம் கிடைத்தது.
கோர்ட் சாதகம்:
கடந்த 2008ல் "நைக்' நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதாக, இவர் மீது சமீபத்தில் பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கோஹ்லிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது.
புதிய ஒப்பந்தங்கள்:
கோர்ட் தீர்ப்பை அடுத்து, சமீபத்தில் புதியதாக 2 ஒப்பந்தம் செய்துள்ளார். சச்சின், ஸ்டீவ் வாக்குடன் ஒப்பந்தம் செய்துள்ள டயர் நிறுவனம், இவரை ஆண்டுக்கு ரூ. 6.5 கோடிக்கு இணைத்துள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் "அடிடாஸ்' நிறுவனம், ஆண்டுக்கு ரூ. 10 கோடி என்ற அளவில், கோஹ்லியை ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது.
இதனால், கோஹ்லியின் ஆண்டு விளம்பர வருமானம் விரைவில் கணிசமாக உயர்ந்து, தோனி, சச்சினை விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முந்துகிறார் கோஹ்லி:
இதுகுறித்து ஒரு தனியார் நிறுவன தலைமை அதிகாரி இந்திராணி தாஸ் பிலா கூறுகையில்,"" கடந்த சில ஆண்டுகளாக விளம்பர உலகில் தோனி ஆதிக்கம் செலுத்தினார். ஆனால், இப்போது கோஹ்லி அதி வேகமாக வளர்ந்து வருகிறார். நகர்ப்புறங்களில் இவருக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இதனால், பல நிறுவனங்கள் இவரை இழுக்க போட்டியிடுகின்றன,'' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment