Monday, September 9, 2013
ஒலிம்பிக்கில் மீண்டும் மல்யுத்தம்: ஓட்டெடுப்பில் அமோக வெற்றி
வரும் 2020ல் நடக்கும் ஒலிம்பிக்கில் மீண்டும் மல்யுத்தம் இடம் பெறுகிறது. நேற்று நடந்த ஓட்டெடுப்பில் மகத்தான வெற்றி பெற்றது. இதனால் இந்திய நட்சத்திரங்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
உலகின் மிகப் பழமையான விளையாட்டு மல்யுத்தம். நவீன ஒலிம்பிக் துவக்கப்பட்டது (1896) முதல் இடம் பெற்று வருகிறது. இதில், இந்தியாவின் ஜாதவ்(1952, ஹெல்சின்கி), சுஷில் குமார், யோகேஷ்வர் தத் ஆகியோர் பதக்கம் வென்று அசத்தினர்.
இதற்கிடையே, போதிய வரவேற்பில்லை என்ற காரணத்துக்காக 2020ல் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்கில் இருந்து மல்யுத்தம் நீக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.,) அறிவித்தது. இதற்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், மல்யுத்தத்தை மீண்டும் சேர்க்க ஏற்பாடுகள் நடந்தன. மல்யுத்தம், ஸ்குவாஷ், பேஸ்பால்/சாப்ட்பால் ஆகிய மூன்று போட்டிகளில் ஏதாவது ஒன்று தேர்வு செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.
ஸ்குவாஷ் நிராகரிப்பு: இது தொடர்பாக அர்ஜென்டினா தலைநகர் பியுனஸ் ஏர்சில் நடக்கும் ஐ.ஓ.சி., பொதுக்குழு கூட்டத்தில் நேற்று ஓட்டெடுப்பு நடந்தது. மொத்தம் உள்ள 95 ஓட்டுகளில், மல்யுத்தம் 49 ஓட்டுகளுடன் முதல் சுற்றிலேயே வெற்றி பெற்றது. இதையடுத்து 2020, 2024ல் நடக்கும் ஒலிம்பிக்கில் தொடர்ந்து இடம் பெறும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்குவாஷ்(22 ஓட்டு), பேஸ்பால்/சாப்ட்பால் (24 ஓட்டு) போட்டிகள் வாய்ப்பை இழந்தன.
சுஷில் மகிழ்ச்சி: இது குறித்து ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் கூறுகையில்,""மீண்டும் மல்யுத்தம் சேர்க்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. ஒலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கும் இந்திய வீரர்களுக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது. எதிர்காலத்தில் நம்மவர்கள் மல்யுத்தத்தில் கண்டிப்பாக நிறைய பதக்கம் வெல்வார்கள்,''என்றார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் ராஜ் சிங் கூறுகையில்,""வரும் 2020ல் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமை ஜப்பானுக்கு கிடைத்த போதே மல்யுத்தம் இடம் பெறும் என நம்பினேன். ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்கள் மல்யுத்தத்திற்கு ஆதரவாக ஓட்டு அளித்ததற்கு நன்றி,''என்றார்.
லண்டன் ஒலம்பிக்கில் வெண்கலம் வென்ற யோகேஷ்வர் தத் கூறுகையில்,"" மல்யுத்தத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. தற்போது இந்த அச்சம் நீங்கியுள்ளது. இன்னொரு பதக்கம் வென்றது போல உணருகிறேன்,''என்றார்.
பயிற்சியாளர் சத்பால் சிங் கூறுகையில்,""ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு நான்கு பதக்கங்கள் மல்யுத்தம் மூலம் தான் கிடைத்தன. தற்போதைய செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,''என்றார்.
சவுரவ் ஏமாற்றம்: இந்திய ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோசல் கூறுகையில்,""ஸ்குவாஷ் போட்டி அரிய வாய்ப்பை இழந்தது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஒலிம்பிக்கில் இடம் பெற தொடர்ந்து முயற்சிப்போம்,''என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment