Saturday, September 7, 2013
நடப்புச் சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்த பயஸ் ஜோடி
அமெரிக்க ஓபனில் ஆடவர் ஒற்றையர் காலிறுதி மற்றும் இரட்டையர் அரையிறுதி ஆட்டங்களில் நடப்புச் சாம்பியன்கள் வெளியேற்றப்பட்டனர்.
இரட்டையர் பிரிவில் இந்த ஆண்டின் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்று 1951-ம் ஆண்டு நிகழ்ந்த சாதனையை சமன் செய்துவிடலாம் என்று எண்ணியிருந்த அமெரிக்காவின் பாப் பிரையன், மைக் பிரையன் சகோதரர்களின் கனவை தகர்த்தது பயஸ் ஜோடி.
நியூயார்க்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக் குடியரசின் ரடேக் ஸ்டீபானெக் ஜோடி 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பிரையன் சகோதரர்களை தோற்கடித்தது.
இந்த ஆண்டில் விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை பிரையன் சகோதரர்கள் வென்றனர். ஆனால், தனது சொந்த நாட்டில் நடைபெற்ற இவ்வாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பிரையன் சகோதரர்களால் வெல்ல முடியவில்லை.
பயஸ் ஜோடி, தங்களது இறுதிச்சுற்றில், போட்டித் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள ஆஸ்திரியாவின் அலெக்ஸாண்டர் பியா-பிரேசிலின் புருனே சோரெஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.
பியா-சோரெஸ் ஜோடி, தங்களது அரையிறுதியில் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் இவான் டோடிஜ்-பிரேசிலின் மார்சிலோ மிலோ ஜோடியை வீழ்த்தியது.
3-வது அமெரிக்க ஓபன் பட்டம்: லியாண்டர் பயஸ், இதற்கு முன் இரட்டையர் பிரிவில் 2006 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். பிரையன் சகோதரர்களை வீழ்த்திய நம்பிக்கையில், தற்போது அவர் இறுதிச்சுற்றை எதிர்கொள்கிறார். இந்தப் பட்டத்தை வென்றால், இரட்டையர் பிரிவில் பயஸ் வென்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 8ஆக உயரும்.
முர்ரேவுக்கு அதிர்ச்சி: ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, நேர் செட்களில் தோல்வியடைந்தார். வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்காவிடம் 6-4, 6-3, 6-2 என்ற செட்களில் முர்ரே தோற்றார்.
இந்த வெற்றி குறித்து வாவ்ரிங்கா கூறுகையில், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இது எனக்கு முதலாவது அரையிறுதி. முர்ரேவை நேர் செட்களில் தோற்கச் செய்ததால், நான் நன்றாகவே விளையாடியுள்ளேன் என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டில், ஒலிம்பிக் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை வென்ற முர்ரேவுக்கு, கடைசி கிராண்ட்ஸ்லாம் பட்டம் கைகொடுக்கவில்லை. 146 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடியுள்ள முர்ரே, தற்போதுதான் நேர் செட்களில் தோல்வி அடைந்துள்ளார்.
வாவ்ரிங்கா-ஜோகோவிச்: ஆடவர் பிரிவின் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2, 3-6, 6-0 என்ற செட் கணக்கில் ரஷியாவின் மிகைல் யோஷ்னியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஜோகோவிச், அமெரிக்க ஓபன் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம், கிராண்ட்ஸ்லாம் போட்டியின் அரையிறுதிக்கு 14 முறை தொடர்ந்து முன்னேறியவர் என்ற பெருமையைப் பெற்றார்
இவர், தனது அரையிறுதிச் சுற்றில் வாவ்ரிங்காவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார். இவர்களிருவரும் இதுவரை 14 முறை மோதியுள்ளனர். அதில், ஜோகோவிச் 12 முறையும், வாவ்ரிங்கா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஜோகோவிச்சுடனான ஆட்டம் குறித்து வாவ்ரிங்கா கூறுகையில், "எங்கள் இருவரிடையேயான ஆட்டத்தில் ஜோகோவிச்சே ஆதிக்கம் செலுத்தியுள்ளார். ஆனால், ஹார்ட் கோட் மைதானத்தில் சிறப்பாக விளையாடி வருவதாக நான் உணர்கிறேன்' என்று தெரிவித்தார்.
சானியா ஜோடி தோல்வி: இப்போட்டியின் மகளிர் இரட்டையர் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா- சீனாவின் ùஸங் ஜீ ஜோடி 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பர்டி-டெல்லச்சுவா ஜோடியிடம் தோல்வியைத் தழுவியது.
அமெரிக்க ஓபனில் பங்கேற்ற இந்திய வீரர்களில், பயஸ் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மகளிர் பிரிவில் நடப்புச் சாம்பியனாக இருந்த இத்தாலியின் சாரா எர்ரானி- ராபர்டா வின்சி ஜோடி 3-6, 1-6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் வில்லியம்ஸ் சகோதரிகளிடம் தோல்வியடைந்தது.
ஆடவர் பிரிவில் அமெரிக்காவின் சகோதரர்கள் ஜோடி தோல்வியைத் தழுவினாலும், மகளிர் பிரிவில் அமெரிக்காவின் சகோதரிகள் ஜோடி வெற்றி பெற்றுள்ளது, அமெரிக்க ரசிகர்களுக்கு ஆறுதலை அதிர்ச்சி யளித்துள்ளது.
ஆடவர் பிரிவு அரையிறுதி போட்டிகள்
ரிச்சர்டு கேஸ்கியூ (பிரான்ஸ், 8) - ரஃபேல் நடால் (ஸ்பெயின், 2) நோவக் ஜோகோவிச் (செர்பியா,1) - ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா (ஸ்விட்சர்லாந்து, 9) அடைப்புக் குறிக்குள் (நாடு, போட்டித் தரவரிசை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment