ஒவ்வொரு தேர்தலிலும் நடிகர், நடிகைகளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுவதுண்டு. கடந்த சட்டசபை தேர்தலில் .தி.மு.க.,வுக்காக சிம்ரன், சி.ஆர்.சரஸ்வதி,
விந்தியா, ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், முரளி, செந்தில்,
ராமராஜன், விஜயகுமார், மனோபாலா, குண்டு கல்யாணம், தாமு, சூரியகாந்த், அருள்மணி, ஆனந்தராஜ் என பெரிய பட்டாளமே பிரசாரம் செய்தது. மயிலாப்பூர் தொகுதியில் நடிகர் எஸ்.வி.சேகர் அ.தி.மு.க., வின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.தி.மு.க.,வுக்காக நடிகர்கள் நெப்போலியன், வாகை.சந்திரசேகர், தியாகு, குமரிமுத்து,
திரைப்படத் தயாரிப்பாளர் ராம.நாராயணன் என வழக்கமான திரைப்பட்டாளம் களமிறங்கியது. புதிய வரவாக, இயக்குனர் பாக்யராஜும் கலந்து கொண்டார். மதுரை இடைத்தேர்தலின் போது நடிகர் ரித்தீஷ், தி.மு.க.,வுக்காக பிரசாரம் செய்தார். காங்கிரஸ் கட்சியில் திரையுலகத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா, மாயா, திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன், வசந்தகுமார் மகன் விஜய் ஆகியோர் உள்ளனர். விஜயகாந்த் பிரபல நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தாலும் அவர், சினிமாக்காரர்ககளை பிரசாரத்துக்கு பயன்படுத்தவில்லை. கடந்த தேர்தலின்போது சிம்ரனுக்கு படவாய்ப்புகள் பெரிய அளவில் இல்லாதிருந்ததால் அவர் அ.தி.மு.க.,வுக்கு தேர்தல் பிரசாரம் செய்தார். சிம்ரனுக்காக அப்போது 75 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டதாக பேசப் பட்டது. ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன்ஆகியோருக்கு ஒரு மேடைக்கு 25 ஆயிரம் ரூபாயும், நடிகை விந்தியாவுக்கு ஒரு மேடைக்கு 15 ஆயிரம் ரூபாயும், தாமுவுக்கு 10ஆயிரம் ரூபாயும், சி.ஆர்.சரஸ்வதி, சூர்யகாந்த்துக்கு ஒரு மேடைக்கு 5,000 ரூபாயும் கொடுக்கப்பட்டது. விஜயகுமார் மொத்தமாக ஒரு தொகை வாங்கிக்கொண்டு தான் பிரசாரம் செய்ததாகவும், நடிகர் முரளிக்கும், செந்திலுக்கும் நாள் கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டு பிரசாரத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும் அப்போது கூறப்பட்டது.
தற்போது சினிமாவிலிருந்து சின்னத் திரைக்கு வந்துள்ள சிம்ரன், டில்லியில் வசித்து வருகிறார். இந்தத் தேர்தலில் யார் பிரசாரத்திற்கு அழைத்தாலும் செல்ல மாட்டேன் என அறிவித்திருக்கிறார்.ராதாரவிக்கும், கட்சி தலைமைக்கும் ஏற்பட்ட வருத்தத்தில் தலைமை நிலைய பேச்சாளர் பட்டியலில் முக்கிய இடத்தில் பெயர் இருந்தும், கட்சிக் கூட்டங்களில் பேச அழைக்கப்படவில்லை ராதாரவியின் அம்மா சமீபத்தில் இறந்தார். அவருக்கு ஜெ., மூலம் இரங்கல் கடிதம் கூட அனுப்பவில்லை என ராதாரவி வருத்தில் இருப்பதாவும் கூறுகின்றனர். இதனால் விஜயகாந்தின் தே.மு.தி.கபக்கம் ராதாரவி தாவினாலும் வியப்படைவதற்கில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஸ்.எஸ்.சந்திரன் அவ்வப்போது கட்சிக் கூட்டங்களில் பேசி வருகிறார். நடிகர் ஆனந்தராஜ் புதுச்சேரி தொகுதியில் அ.தி.மு.க வின் சார்பில் போட்டியட முயற்சித்து வருகிறார்.தேர்தல் பிரசாரம் செய்யப்போனதால் நடிகர் முரளிக்கும், செந்திலுக்கும் சினிமா வாய்ப்பும் கிடைக்காமல் போய்விட்டது. இதனால் இந்தத் தேர்தலில் அவர்கள் பிரசாரம் செய்ய வருவது கேள்விக்குறியே.ராமராஜன் தேர்தல் பிரசாரத்திற்கு தயாராக இருந்தாலும் அவருக்கு கட்சியிலிருந்து அழைப்பு இருக்குமா எனத் தெரியவில்லை.