Sunday, February 15, 2009

காதலர் தினத்தில் நாய்களுக்கு திருமணம்


ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ந் தேதி உலக காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் காதலர் தினத்துக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், எதிராக ஒரு தரப்பினரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இதனால் இந்த ஆண்டு காதலர் தினம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் காதல் தினத்தை காதலர்கள் கொண்டாடினார்கள். காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை கொடுத்தும், விதவிதமான நகைகள் மற்றும் ஆடைகளை கொடுத்தும் காதலர் தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இதற்கிடையே காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குமரி மாவட்ட இந்து மகாசபாவினர் நாகர்கோவிலில் 2 நாய்களுக்கு திருமணம் நடத்தி வைத்தனர். நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பு பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு இந்து மகாசபா மாவட்ட தலைவர் நீலகண்டபிள்ளை தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்காக தெருவில் சுற்றித்திரிந்த ஒரு ஆண் நாயையும், ஒரு பெண் நாயையும் இந்து மகாசபா பொறுப்பாளர்கள், நாய் பிடிப்பவர்கள் மூலம் பிடித்து பீச்ரோடு சந்திப்புக்கு நேற்று காலை கொண்டு வந்தனர். அப்போது திடீரென ஆண் நாய் அங்கிருந்து ஓடிவிட்டது. உடனே அந்த நாயை விரட்டிப்பிடித்து மீண்டும் கொண்டு வந்தனர்.புரோகிதர் மந்திரம் ஓத நாய்களுக்கு மாலை மாற்றப்பட்டது. பின்னர் ஆண் நாய், பெண் நாய்க்கு குங்குமம் இட்டு, மஞ்சள் தாலி அணிவித்து திருமணம் செய்வது போன்ற நிகழ்ச்சி நடந்தது.
திருமணம் செய்து கொண்ட 2 நாய்களையும், மணமக்களை வாழ்த்துவதுபோல அங்கு கூடியிருந்த பொதுமக்களும், இந்து மகாசாபா நிர்வாகிகளும் வாழ்த்தினார்கள்.காதலர் திருமணத்தையொட்டி நாய்களுக்கு நடத்தி வைக்கப்பட்ட இந்த திருமண நிகழ்ச்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments: