மும்பையை தொடர்ந்து, பெங்களூரு நகரிலும், "லேடீஸ்
ஒன்லி' டாக்சிகள் இயங்கப் போகின்றன. இதற்கான திட்டத்தை மத்திய
பெண்கள் நலத்துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரி அமல்படுத்த உள்ளார்.
பெங்களூரு நகரில் 2005ல், கால் சென்டர் பெண் ஊழியர் ஒருவர், பணி
முடிந்து, வாடகைக்காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது
கொல்லப்பட்டார். இதனால், பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கேள்விக்
குறியாக இருந்தது.
அதன் பின், பெங்களூரு நகரில், பெண்களுக்கு பயணம் செய்யும்
வாகனங்களில் பெண் டிரைவர்களை அமர்த்த முயற்சி மேற்கொள்ளப்
பட்டது. ஆனால், அதற்கு எந்த வித வரவேற்பும் இல்லை. இப்போது இந்த
விஷயத்தில் அமைச்சர் ரேணுகா சவுத்ரி அதிக ஆர்வம் காட்டி
வருகிறார். அரசு சார்பில் நடத்தப்படும் ஓட்டல்கள், விருந்தினர்
மாளிகைகளில் பயன்படுத்தப்படும் சுற்றுலா வாகனங்களில், "லேடீஸ்
ஒன்லி' வாகனங்களாக சிலவற்றை மாற்றி, அவற்றை இயக்க பெண்
டிரைவர்களை அமர்த்த முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து, தனியார் ஓட்டல்களிலும், "லேடீஸ் ஒன்லி'
டாக்சிகளுக்கு மவுசு ஏற்பட்டால், தகவல் தொழில்நுட்ப
நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு பயன்படும் வகையில்,
"லேடீஸ் ஒன்லி' டாக்சிகளை அதிகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, அமைச்சகம் மூலம், பெண்களுக்கு, வாகனம் ஓட்டும்
பயிற்சியும், அதை வாங்கி டாக்சியாக ஓட்ட வங்கிக்கடனும் அளிக்க
ஏற்பாடு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு நகரை தொடர்ந்து டில்லி, ஐதராபாத் நகரங்களிலும்,
"லேடீஸ் ஒன்லி' டாக்சிகளை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்
ரேணுகா.
இதுபற்றி அவர் கூறுகையில், "மங்களூரு சம்பவத்தை கண்டுகொள்ளாதது
மூலம், பெண்களுக்கு எதிரான அரசாக கர்நாடகாவில் உள்ள பா.ஜ., அரசு
காட்டிக்கொண்டு விட்டது. "பப்' சென்ற அப்பாவி பெண்களை தாக்கியது
கண்டிக்கத் தக்கது. அதனால், பெண்களை பல துறைகளிலும்
முன்னேற்றுவது போல, பெண்கள் பாதுகாப்புக்காக, "லேடீஸ் ஒன்லி'
டாக்சிகளை எல்லா முக்கிய நகரங்களிலும் அறிமுகம் செய்ய முடிவு
செய்துள்ளோம். இதற்கு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பும்
பெறப்படும்' என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment