Wednesday, August 28, 2013
இந்தியாவின் அடுத்த சானியா மிர்ஸா!
அங்கிதா ரெய்னா...’ இந்தியாவின் இளம் டென்னிஸ் புயல்!
20-வது வயதிலேயே இந்தியாவின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை அங்கீகாரம் பெற்றிருக்கும் அங்கிதா, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். பி.காம்., மாணவியான அங்கிதா, இந்த ஆண்டு மட்டும் இதுவரை நான்கு சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றிருக்கிறார்.
''இந்தியாவின் அடுத்த சானியா மிர்ஸா தயாராகிறாரா?''
''அப்படிச் சொன்னால் ரொம்ப சந்தோஷப்படுவேன். அஞ்சு வருடங்கள் முன் சானியா மிர்ஸா, ஷிகா, சுனிதா ராவ் என இந்தியாவிலிருந்து மூன்று வீராங்கனைகள் சர்வதேச அளவில் விளையாடிவந்தார்கள். அதன் பிறகு சர்வதேச அளவில் இந்திய வீராங்கனைகள் முத்திரைப் பதிக்கவில்லை. இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் சாதனைகள் படைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். அடுத்த ஆண்டு 'கிராண்ட்ஸ்லாம்’ பந்தயங்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் நிச்சயம் விளையாடுவேன். புல் மற்றும் களிமண் என இரண்டு வகையான மைதானங்களிலும் சிறப்பாக விளையாடிவருவது எனக்கு அதிக நம்பிக்கையை உண்டாக்கி இருக்கிறது!''
டென்னிஸ் ஆர்வம் எப்படி வந்தது?''
''என் அம்மா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை. எங்கள் வீட்டுக்குப் பின்னாலேயே டென்னிஸ் மைதானம் இருந்தது. அதனால் நான்கு வயது முதல் என் அம்மா அந்த விளையாட்டு மைதானத்துக்கு என்னை அழைத்துச் செல்வார். எனக்கு டென்னிஸ் பிடித்துப்போக, முழுவதுமாக டென்னிஸில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். கடந்த ஆறு ஆண்டுகளாக புனே-வில் தங்கி பயிற்சி எடுத்துவருகிறேன்!''
''உங்களை மிகவும் உற்சாகப்படுத்திய பாராட்டு எது?''
''ஸ்பெயினில் ஸ்பானிஷ் வீரருடன் பயிற்சி ஆட்டத்தில் ஆடிக்கொண்டிருந்தேன். அப்போது உலகின் மூன்றாம் நிலை வீரரான டேவிட் ஃபெர்ரரும் அவருடைய பயிற்சியாளரும் அந்தப் பக்கமாகச் சென்றார்கள். அடுத்த கோர்ட்டுக்கு செல்ல வேண்டியவர்கள் என் ஆட்டத்தைப் பார்த்து அங்கேயே நின்றுவிட்டனர். டேவிட் ஃபெர்ரரின் பயிற்சியாளர் என்னிடம், 'உனக்கு பேக்ஹேண்ட் நன்றாக வருகிறது. விரைவில் உன்னை சர்வதேச அரங்கில் பார்க்கலாம்’ என்று பாராட்டினார். அந்தப் பாராட்டை என்னால் மறக்கவே முடியாது!''
''உங்களுடைய ரோல் மாடல்?''
''ரஃபேல் நடால். அவருடைய எனர்ஜியும் டெக்னிக்கும்... அதிசயம்!''
''சர்வதேச அளவில் விளையாடச் செல்லும் இந்திய வீராங்கனைகள் சந்திக்கும் சவால்கள் என்ன?''
''வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள பெரும்பாலும் தனியாகத்தான் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. கூடுதலான பணம் செலவாகும் என்பதால், வீட்டிலிருந்து துணைக்கு யாரையும் அழைத்துச்செல்ல முடிவதில்லை.
ஒருமுறை நானும் இன்னொரு டென்னிஸ் வீராங்கனையும் மொராக்கோவுக்கு விளையாடச் சென்றோம். அங்கே நாங்கள் விளையாட வேண்டிய இடத்துக்கு செல்ல ரயில் ஏறினோம். அங்கே மக்கள் அனைவரும் பிரெஞ்சு மொழியில்தான் பேசினார்கள். நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் பெயரை எப்படிச் சொல்லியும் அவர்களுக்குப் புரியவில்லை. கடைசியில், நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷனில் இருந்து ரயில் கிளம்பிய சில விநாடிகளில் ஒருவர், 'இதுதான் நீங்கள் இறங்கவேண்டிய ஸ்டேஷன்’ என்றார். போட்டிக்குத் தாமதமாகிறது என்பதால், ரயிலை நிறுத்த அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தேன். செக்கிங் இன்ஸ்பெக்டர் வந்து 6,000 திராம் அபராதம் விதித்துவிட்டார். நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்துதான் எங்களை விடுவித்தார்கள். அன்று எங்களால் அந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை.
இப்படியான சூழல்தான் மிகப் பெரிய சவால். பெரியவர்களுடன் செல்லும்போது இதுபோன்ற சூழலில் இருந்து தப்பிக்கலாம். போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தலாம்!''
''உங்கள் லட்சியம்?''
''இந்திய வீராங்கனைகள் யாரும் இதுவரை ஒற்றையர் பிரிவில் 'கிராண்ட்ஸ்லாம்’ பட்டம் வென்றது இல்லை. அதேபோல் ஒலிம்பிக்கிலும் தங்கப் பதக்கம் வென்றது இல்லை. இந்த இரண்டு சாதனைகளையும் படைக்கவேண்டும் என்பதே என் லட்சியம்!''
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment