Wednesday, August 28, 2013
என் பலம் எனக்குத் தெரியும்!”
உலக பேட்மிட்டன் அரங்கில், 'இந்தியாவின் இன்னோர் இளம் புயல்’ பி.வி.சிந்து!
சீனா, தாய்லாந்து, மலேசிய வீரர்களின் ஆதிக்கம் நிறைந்திருந்த பேட்மிட்டன் கோட்டையில், ஊடுருவியவர் சாய்னா. அந்த சாய்னாவே எட்டிப்பிடிக்காத சாதனையாக உலக பேட் மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார் சிந்து.
முன்னாள் கூடைப் பந்தாட்ட வீரர்களான ரமணா - விஜயா ஆகியோரின் இரண்டாவது மகள், சிந்து. விஜயா, தனது பள்ளி, கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்தவர். ரயில்வே வேலைக்காக ஹைதராபாத்துக்கு இடம் மாறியவர்.
''ஐந்து வயதில் அப்பாவுடன் வாலிபால் மைதானத்துக்குச் செல்லும்போது அருகில் இருந்த பேட்மிட்டன் அரங்கில் விளையாட ஆர்வம் காட்டிய சிந்துவை, பேட்மிட்டன் பயிற்சியில் சேர்த்தார் ரமணா. அதன் பிறகு, இந்தியாவின் முன்னணி பேட்மிட்டன் பயிற்சியாளரான கோபிசந்தின் அகாடமியில் ஆறு வருடங்களாகப் பயிற்சி பெற்றுவருகிறார்!'' என்று கூறும் விஜயாவின் குரலில் அத்தனை பூரிப்பு.
''நான், சர்வதேச அளவில் விளையாடுவேன் என்று ஒரு போதும் நினைக்கவில்லை. என் கனவை நிறைவேற்றிய என் பயிற்சியாளர் கோபிசந்த் சாருக்குத்தான் இந்த வெற்றிக்கான பெருமை எல்லாம் சேரும்!'' என்கிறார் சிந்து அடக்கமாக.
நான் தினமும் நான்கு செஷன்களாக பயிற்சி எடுப்பேன். காலை 4.30 முதல் 6 மணி வரை, பிறகு 7 மணி முதல் 8.30 மணி வரை, மீண்டும் 11.30 மணி முதல் 12.30 வரை. பிறகு, கொஞ்சம் ஓய்வு. மீண்டும் மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை. ஒருநாள்கூட பயிற்சி தவறாது. பந்தயங்களின்போது கடைசிப் புள்ளி வரை சோர்வடையாமல் விளையாடுவதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படும். அதனால் ஸ்டாமினாவை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே இருக்க வேண்டும். நான் 5 அடி 10 அங்குல உயரம் இருப்பது, கடவுள் எனக்குக் கொடுத்த மிகப் பெரிய வரம். பேட்மிட்டன் வீரர்கள், பொதுவாக இந்த அளவு உயரமாக இருக்க மாட்டார்கள். இந்த உயரத்தால் ஸ்மாஷ் ஷாட்டுகளை என்னால் மிகவும் எளிதாக அடிக்க முடிகிறது!'' என்று சொல்லும் சிந்து, ஹைதராபாத் செயின்ட் ஆன்ஸ் கல்லூரியின் (பி.காம்.,) முதலாம் ஆண்டு மாணவி. 2011-ம் ஆண்டு தொடக்கத்தில் பேட்மிட்டன் தரவரிசைப் பட்டியலில் 204-வது இடத்தில் இருந்தவர், இரண்டே ஆண்டுகளில் 12-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நடைபெற்ற மலேசிய ஓப்பன் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும், லண்டன் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவருமான சீனாவின் லீ ஸ¨ராயைத் தோற்கடித்து சர்வதேச கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்தவர், தற்போதைய உலக பேட்மிட்டன் தொடரில் முன்னாள் சாம்பி யன்களான சீனாவின் யிஹான் வாங் மற்றும் ஷிஸியான் வாங்கைத் தோற்கடித்து அசத்தியிருக்கிறார்.
''உலகின் டாப் வீராங்கனைகளைத் தோற்கடித்து இருக்கிறீர்கள். இனி, உங்கள் ஒவ்வொரு போட்டிக்கும் ஏகப பட்ட எதிர்பார்ப்பைச் சுமக்க வேண்டிஇருக்குமே?''
''இதை 'பிரஷர்’ என எடுத்துக்கொள்ள மாட்டேன். இதற்கு முன் பார்க்காத பலர், என் ஆட் டத்தைப் பார்க்கிறார்கள்; உற்சாகப்படுத்துகிறார்கள் என்று பாசிட்டிவாக எடுத்துக்கொள்வேன். சர்வதேச வீரர் - வீராங்கனைகளுக்கான முதல் தகுதியே பிரஷரை சமாளிப்பதுதான். அந்தப் பக்குவம் எனக்கு இருக்கிறது என நம்புகிறேன். ஏனென்றால், கோபிசந்த் சார் பயிற்சியின் தொடக்கப் பாடமே, 'உனது ஆட்டத்தில் கவனம் செலுத்து’ என்பதுதான்! எதிராளியின் பலம் என்ன, பலவீனம் என்ன என் பதை யோசித்துக் குழப்பிக்கொள் ளாமல், என் பலத்தை வைத்து எப்படி ஸ்கோர் செய்வது என்று தான் யோசிப்பேன்!''
''உங்களின் ரோல் மாடல்?''
''உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இப்போது சாம்பியன் பட்டம் வென்ற சீனாவின் லின் டான்தான். உணர்ச்சிகளை வெளியே காட்டிக்கொள்ளாமல் விவேகமாக விளையாடுவார்!''
2016-ம் ஆண்டின் பிரேசில் ஒலிம்பிக் போட்டிகளின்போது தங்க வேட்டையில் சாய்னா வுக்கு தோள்கொடுக்கவிருக்கிறார் சிந்து.
கலக்குங்க சிஸ்டர்ஸ்!
இந்தியாவின் அடுத்த சானியா மிர்ஸா!
அங்கிதா ரெய்னா...’ இந்தியாவின் இளம் டென்னிஸ் புயல்!
20-வது வயதிலேயே இந்தியாவின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை அங்கீகாரம் பெற்றிருக்கும் அங்கிதா, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். பி.காம்., மாணவியான அங்கிதா, இந்த ஆண்டு மட்டும் இதுவரை நான்கு சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றிருக்கிறார்.
''இந்தியாவின் அடுத்த சானியா மிர்ஸா தயாராகிறாரா?''
''அப்படிச் சொன்னால் ரொம்ப சந்தோஷப்படுவேன். அஞ்சு வருடங்கள் முன் சானியா மிர்ஸா, ஷிகா, சுனிதா ராவ் என இந்தியாவிலிருந்து மூன்று வீராங்கனைகள் சர்வதேச அளவில் விளையாடிவந்தார்கள். அதன் பிறகு சர்வதேச அளவில் இந்திய வீராங்கனைகள் முத்திரைப் பதிக்கவில்லை. இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் சாதனைகள் படைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். அடுத்த ஆண்டு 'கிராண்ட்ஸ்லாம்’ பந்தயங்களுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் நிச்சயம் விளையாடுவேன். புல் மற்றும் களிமண் என இரண்டு வகையான மைதானங்களிலும் சிறப்பாக விளையாடிவருவது எனக்கு அதிக நம்பிக்கையை உண்டாக்கி இருக்கிறது!''
டென்னிஸ் ஆர்வம் எப்படி வந்தது?''
''என் அம்மா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை. எங்கள் வீட்டுக்குப் பின்னாலேயே டென்னிஸ் மைதானம் இருந்தது. அதனால் நான்கு வயது முதல் என் அம்மா அந்த விளையாட்டு மைதானத்துக்கு என்னை அழைத்துச் செல்வார். எனக்கு டென்னிஸ் பிடித்துப்போக, முழுவதுமாக டென்னிஸில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். கடந்த ஆறு ஆண்டுகளாக புனே-வில் தங்கி பயிற்சி எடுத்துவருகிறேன்!''
''உங்களை மிகவும் உற்சாகப்படுத்திய பாராட்டு எது?''
''ஸ்பெயினில் ஸ்பானிஷ் வீரருடன் பயிற்சி ஆட்டத்தில் ஆடிக்கொண்டிருந்தேன். அப்போது உலகின் மூன்றாம் நிலை வீரரான டேவிட் ஃபெர்ரரும் அவருடைய பயிற்சியாளரும் அந்தப் பக்கமாகச் சென்றார்கள். அடுத்த கோர்ட்டுக்கு செல்ல வேண்டியவர்கள் என் ஆட்டத்தைப் பார்த்து அங்கேயே நின்றுவிட்டனர். டேவிட் ஃபெர்ரரின் பயிற்சியாளர் என்னிடம், 'உனக்கு பேக்ஹேண்ட் நன்றாக வருகிறது. விரைவில் உன்னை சர்வதேச அரங்கில் பார்க்கலாம்’ என்று பாராட்டினார். அந்தப் பாராட்டை என்னால் மறக்கவே முடியாது!''
''உங்களுடைய ரோல் மாடல்?''
''ரஃபேல் நடால். அவருடைய எனர்ஜியும் டெக்னிக்கும்... அதிசயம்!''
''சர்வதேச அளவில் விளையாடச் செல்லும் இந்திய வீராங்கனைகள் சந்திக்கும் சவால்கள் என்ன?''
''வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள பெரும்பாலும் தனியாகத்தான் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. கூடுதலான பணம் செலவாகும் என்பதால், வீட்டிலிருந்து துணைக்கு யாரையும் அழைத்துச்செல்ல முடிவதில்லை.
ஒருமுறை நானும் இன்னொரு டென்னிஸ் வீராங்கனையும் மொராக்கோவுக்கு விளையாடச் சென்றோம். அங்கே நாங்கள் விளையாட வேண்டிய இடத்துக்கு செல்ல ரயில் ஏறினோம். அங்கே மக்கள் அனைவரும் பிரெஞ்சு மொழியில்தான் பேசினார்கள். நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் பெயரை எப்படிச் சொல்லியும் அவர்களுக்குப் புரியவில்லை. கடைசியில், நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷனில் இருந்து ரயில் கிளம்பிய சில விநாடிகளில் ஒருவர், 'இதுதான் நீங்கள் இறங்கவேண்டிய ஸ்டேஷன்’ என்றார். போட்டிக்குத் தாமதமாகிறது என்பதால், ரயிலை நிறுத்த அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தேன். செக்கிங் இன்ஸ்பெக்டர் வந்து 6,000 திராம் அபராதம் விதித்துவிட்டார். நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்துதான் எங்களை விடுவித்தார்கள். அன்று எங்களால் அந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை.
இப்படியான சூழல்தான் மிகப் பெரிய சவால். பெரியவர்களுடன் செல்லும்போது இதுபோன்ற சூழலில் இருந்து தப்பிக்கலாம். போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தலாம்!''
''உங்கள் லட்சியம்?''
''இந்திய வீராங்கனைகள் யாரும் இதுவரை ஒற்றையர் பிரிவில் 'கிராண்ட்ஸ்லாம்’ பட்டம் வென்றது இல்லை. அதேபோல் ஒலிம்பிக்கிலும் தங்கப் பதக்கம் வென்றது இல்லை. இந்த இரண்டு சாதனைகளையும் படைக்கவேண்டும் என்பதே என் லட்சியம்!''
Friday, August 23, 2013
ஸ்குவாஷ் தீபிகா... காதல் பத்திக்கிச்சு!
தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிக்கல்... விளையாட்டு உலகின் புதிய காதல் ஜோடி!
சர்வதேச ரேங்கிங்கில் உச்ச இடம் பிடித்திருக்கும் ஸ்குவாஷ் வீராங்கனை சென்னையைச் சேர்ந்த தீபிகாவுக்கும், இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக்குக்கும் இடையே காதல்!
இருவர் வீட்டிலுமே காதலுக்கு சம்மதம் கிடைக்க, ஜாலியாக 'லவ் கேம்’ ஆடுகிறார்கள். ஆனால், தத்தமது கேரியரில் அடுத்தகட்ட முத்திரைக்கான முயற்சியில் இருப்பதால், வெளிப்படையாக தங்கள் காதலை ஒப்புக்கொள்ளவில்லை.
சினிமாவில் நடிக்க உச்ச நட்சத்திரங்கள் அழைப்புவிடுத்தும் கண்டுகொள்ளாத, சென்னையின் மல்ட்டிமில்லியனர் குடும்பங்கள் தங்கள் வீட்டு மருமகளாக்கிக்கொள்ள முயன்றும் அசைந்துகொடுக்காத தீபிகா, தினேஷ§டன் காதல்கொண்டது ஒருவகையில் விசேஷம். காரணம், தினேஷ் கார்த்திக் முன்னரே திருமணமாகி விவாகரத்தானவர்! இந்தக் காதல் தொடர்பாக தினேஷ் கார்த்திக்கின் நண்பரிடம் பேசினேன்.
''தினேஷைவிட ஆறு வயது இளையவர் தீபிகா. தினேஷின் குடும்பம், குவைத்தில் செட்டிலான குடும்பம். கிரிக்கெட் வாய்ப்புகளுக்காக தினேஷ் மட்டும் சென்னையில் தனியாக இருந்தார். அதனால் அவருக்கு 21 வயதிலேயே திருமணம் செய்து வைத்தார்கள். அவரது முன்னாள் மனைவி நிகிதா, மும்பையைச் சேர்ந்தவர். நிகிதாவுக்கும், இந்திய கிரிக்கெட் அணி வீரரும், தினேஷின் நண்பருமான ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரியவர, உடைந்துபோனார் தினேஷ். கிட்டத்தட்ட ஆறு மாதம் அவர் யாருடனும் சரியாகப் பேசவே இல்லை. அதன்பிறகு நிகிதாவை விவாகரத்து செய்துவிட்டார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு ஜிம்மில்தான் தீபிகாவை முதன்முதலில் சந்தித்தார் தினேஷ். அடுத்தடுத்த சந்திப்புகளில் இருவரிடையே உருவான நட்பு, வெகுவிரைவிலேயே காதலாக மலர்ந்தது. கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்தில் ஸ்குவாஷ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தீபிகாவுக்கு, சர்ப்ரைஸ் சந்திப்பு மூலம் அதிர்ச்சியளித்தார் தினேஷ். பிறகு இந்திய அணி, இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் விளையாடியபோது தினேஷ§ம் தீபிகாவும் ஒன்றாகவே லண்டன் வீதிகளில் ஜாலி வலம் வந்திருக்கிறார்கள். அந்த உற்சாகம்தானோ என்னவோ, சாம்பியன்ஸ் டிராஃபியில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டிகளில் சதம் அடித்தார் தினேஷ். அதேபோல் இந்த ஆண்டு மும்பை அணிக்காக ஐ.பி.எல். போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடினார். தினேஷ் மீண்டும் ஃபார்முக்கு வர தீபிகாவின் காதலே காரணம்!'' என்று முடித்தார் அவர்.
இப்போது தினேஷ் தென் ஆப்பிரிக்காவிலும், தீபிகா லண்டனிலும் பயிற்சியில் இருக்கிறார்கள். காதல்குறித்து விளக்கமளிக்க, இருவருக்குமே விருப்பம் இல்லை.
தீபிகாவின் அம்மா சூசனிடம் பேசினேன். ''இருவரும் காதலிப்பது உண்மைதான். ஆனால், திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் பந்தம். அதனால் எப்போது திருமணம் என்று இப்போது நான் பதில் சொல்ல முடியாது!'' என்றார். ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்கிறார்கள் இருதரப்புக்கும் நெருக்கமான நண்பர்கள்.
புது காதல் ஜோடிக்கு வாழ்த்துகள்!
Subscribe to:
Posts (Atom)